Saturday, April 24, 2010

தரிசனம் 13

குரு: பிரியத்திற்குரிய சாதகனே இப்போது ஒரு சிறு பயிற்சி செய்து பார்க்கலாமா?
சாதகன்: சொல்லுங்கள் குருவே பயிற்சியை செய்து பார்க்கலாம்.
குரு: இந்த பயிற்சியை செய்யும்பொழுது வயிறு காலியாக இருக்க வேண்டும். ஆரோக்யமான உடல்நிலையில் இருக்கவேண்டும். இரண்டு நாசியிலும் ஒரு சேர காற்று வந்து போக வேண்டும். மனமோ, உடலோ பதட்டமின்றி இருக்க வேண்டும். சரியா?
சாதகன் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன் குருவே!
குரு: சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை நோக்கி அமரவேண்டும். நீ அமரும் ஆசனம், பருத்தியாலான துணியாலோ, கோரையினாலான பாயாகவோ இருக்கலாம்.( புவி ஈர்ப்பு விசையை, பூமி வலுவாக உன்மீது செலுத்த முடியாத அளவுக்கு ஒருபொருளாக இருக்கட்டும்) நிமிர்ந்து முதுகு தண்டை நேராக வைத்து பத்மாசனத்தில் அமரவும். லேசாக கண்களை மூடவும். இரண்டு கைகளையும் முழங்கால் மீது சின் முத்திரையில் வைத்துக்கொள்ளவும். உனது முழு கவனத்தையும் உனக்கு உள்ளேயே வைத்திருக்கவும். கவனம் உனக்குள்ளேயே லயித்த பிறகு, நீ இருப்பதை , உனது இருப்பை கவனி. ( நீ இறந்து போயிருந்தால், உன் இருப்பை உன்னால் கவனிக்க முடியாது அல்லவா! நீ இப்போது உயிருடனே இருக்கிறாய். நீ இருப்பதை உன் உடலில் எந்த இடத்தில் அறிகிறாய்? உன் இருப்பை உன் உடல் முழுவதும் நீ அறிந்தாலும், அந்த உணர்வின் அஸ்திவாரம் எங்கு நிலவுகிறது என்பதை( உன் அறிவால் அல்ல, உன் உணர்வால்) உன் உணர்வு வழியாக தேடு. இப்போது உன் உணர்வுகள் செறிவு கொண்டு, உனது முதுகு தண்டின் அடிப்பாகமான (நுனி) மூலாதாரத்தில் உணரப்படுவதை அறிகிறாயா? உன் மூல இருப்பு உணர்வு உன் மூலாதாரத்தில் வேரடித்து கிடக்கிறது. அந்த இருப்பு நிலையிலேயே லயிப்பாயாக! இது தான் உன் வசிப்பிடம். இனி நீ எழுப்ப போகும் ஆன்மீக கோபுரத்துக்கு இதுதான் அஸ்திவாரம். இங்கிருந்து லவலேசமும் விலகலாகாது. உனது இருப்பு நிலையை முழுவதும் நீ உணர்ந்த பிறகு , அஸ்திவாரம் கெட்டியாகி பலமான பிறகு, இந்த பிரபஞ்ச பேரிருப்பு நிலையை நோக்கி உனது உணர்வு நிலைகளை மேல்நோக்கி செலுத்துவாயாக! உனது முதுகு தண்டில் அமைந்துள்ள ஏழு சக்கர நிலைகளின் வழியே சகஸ்ராரத்தையும் தாண்டி அந்த எல்லையற்ற அண்ட சராசர பெரு வெளியில் இயங்கும் அப்பிரபஞ்ச பேரிருப்பு நிலையை தியானிப்பாயாக!இப்போது
தியானத்தை 'கூட' விடாமல் ( உனது இருப்பு நிலைக்கும், பிரபஞ்ச பேரிருப்பு நிலைக்கும் நடுவே ஒரு படலம் தோன்றுகிறதா?) அது தான் உன் சிலேட்டு. நீ கிறுக்குவதும், எழுதுவதும்,அழிப்பதுமான உன் மனம். இது உன் கையில் கிடைத்த கொட்டாங்குச்சி, இதிலே தான் மண்ணையும்,தண்ணீரையும் விட்டு குழப்பி நீ சோறு சமைக்கிறாய்) இதை தோற்றுவிப்பது வேறு எதுவும் இல்லை. பூமியின் வலுவான ஈர்ப்புவிசையே! உனது உணர்வே ஒரு பொருள்தான்.(material)(அந்த பேரிருப்பின் உணர்விலிருந்து எழுந்த எண்ணம் தான் இந்த பிரபஞ்சமே!)
அந்த பொருளை நீ புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி தூக்கவே, பூமியை நோக்கி ஈர்ப்புவிசை கீழ்நோக்கி இழுப்பதே உனது மனமாக(எண்ணங்களாக)
பாவிக்க படுகிறது. இந்த மனதின் விளையாட்டை ரசிக்காமல், பிரபஞ்ச பேரிருப்பின் அருள்மிக்க கருணாசாகரத்தை நோக்கி, ஒரு சுகத்தன்மையோடு முன்னேற, முன்னேற உணர்வு ஆனந்தம்பெறும்.
மனம் சாந்தம் பெறும்.
இந்த பயிற்சிக்கு பின்
உனது உணர்வு தன்மையை உன் இருப்பு நிலையில் நிறுத்தி வைக்கமுடியும். தேவை இல்லாமல் மனதின் விளையாட்டுக்கு பின்னால் உணர்வு ஓடாது.

No comments:

Post a Comment