குரு: இந்த பயிற்சியில் ஓர் அதிசயத்தை கண்டாயா?
சாதகன்: அதிசயமா? எனக்கு தெரியவில்லையே!
குரு: உனக்கு புருவமத்தியில் ஒளி எழுந்ததா?
சாதகன்: ஆம், ஒளி எழுந்தது குருவே! கொஞ்ச நேரம் அந்த ஒளியுலகில் நீடிக்கவும் செய்தேன். அங்கு நானே இல்லை. ஆனால் ஓர் அறிதல் மட்டும் இருந்தது. அது சுகமாகவும் இருந்தது. அது பேதமற்ற நிலை.
குரு: இன்னொன்றை கவனித்தாயா? .
சாதகன்: சொல்லுங்கள் குருவே!
குரு: அப்போது உனது மனம் எங்கிருந்தது?
சாதகன்: ஆம், குருவே! இந்த நிகழ்வின் போது மனம் காணப்படவே இல்லை!.
குரு: இதுதான் அதிசயம். உனக்கு வயது எத்தனை?
சாதகன்: எனக்கு 54 வயது ஆகிறது.
குரு: இவ்வளவு காலம் நீ எப்போதாவது உன் மனம் காணாமல் போய் பார்த்திருக்கிறாயா?
சாதகன்: குருவே நான் தூங்கினாலும் என் மனம் தூங்கி நான் பார்த்ததில்லை. அது சதா பரபரப்புடன் தான் இருக்கும், காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது அப்படித்தான். அது ஒரு நொடியும் சும்மா இருந்ததில்லை. காரண, காரியமின்றி நினைவு தொடர்களில் தாவி, தாவி போய்க்கொண்டே இருக்கும். அதை பின் தொடர்ந்து, பின் தொடர்ந்து அலுத்துப்போய் விட்டேன்.
குரு: மேலும் உன் வாழ்க்கையைப் பற்றி சொல்.
சாதகன்: குருவே இந்த வாழ்க்கையில் எதுவும் சுவாரஸ்யம் இல்லை. ஓர் 54 வருட அனுபவ நினைவை தவிர இதில் வேறென்ன இருக்கிறது? ஒரு விபத்தோ, ஒரு இடரோ வந்து இறந்தால் ஒழிய, இன்னும் பத்து வருடத்திற்கு தாங்கும் இந்த உடல் ஆரோக்கியம். ஒரு பத்து வருடம் கழித்து நான் இறந்து விட்டால், ஒரு 64 வருட அனுபவ நினைவு மட்டுமே மீதி. இந்த அனுபவ நினைவு மட்டும்தான் வாழ்க்கையா? இந்த வாழ்வின் சாராம்சம் வெறும் அனுபவம் மட்டும் தானா?
குரு: நீ என்னோடு இணைவதற்கு தகுதியாகி விட்டாய். நீ தொடர்ந்து உன் உடலில் உள்ள உணர்வை மட்டும் அறிந்து கொண்டு வா! சீட்டை கலைத்துப்போட்டு சூது விளையாடும், மனதின் பின்னால் போகாதே! எப்போதும் ஒவ்வொரு க்ஷணமும் உண்மையாக
உள்ள தன்னுணர்வில் மட்டும் இரு! கற்பனையான எண்ண தொடர்ச்சியின் பின்னால் போகாதே!
No comments:
Post a Comment