Wednesday, April 28, 2010

தரிசனம் 15

குரு:சாதகனே இப்போது ஒரு சிறு பயிற்சி செய்து பார்க்கலாமா?
சாதகன்: சொல்லுங்கள் குருவே!
குரு: இந்த பயிற்சியை செய்யும்பொழுது வயிறு காலியாக இருக்க வேண்டும். ஆரோக்யமான உடல்நிலையில் இருக்கவேண்டும். இரண்டு நாசியிலும் ஒரு சேர காற்று வந்து போக வேண்டும். மனமோ, உடலோ பதட்டமின்றி இருக்க வேண்டும். சரியா?
சாதகன் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன் குருவே!
குரு: சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை நோக்கி அமரவேண்டும். நீ அமரும் ஆசனம், பருத்தியாலான துணியாலோ, கோரையினாலான பாயாகவோ இருக்கலாம்.( புவி ஈர்ப்பு விசையை, பூமி வலுவாக உன்மீது செலுத்த முடியாத அளவுக்கு ஒருபொருளாக இருக்கட்டும்) நிமிர்ந்து முதுகு தண்டை நேராக வைத்து பத்மாசனத்தில் அமரவும். லேசாக கண்களை மூடவும். இரண்டு கைகளையும் முழங்கால் மீது சின் முத்திரையில் வைத்துக்கொள்ளவும். உனது முழு கவனத்தையும் உனக்கு உள்ளேயே வைத்திருக்கவும். கவனம் உனக்குள்ளேயே லயித்த பிறகு, நீ இருப்பதை , உனது இருப்பை கவனி. ( நீ இறந்து போயிருந்தால், உன் இருப்பை உன்னால் கவனிக்க முடியாது அல்லவா! நீ இப்போது உயிருடனே இருக்கிறாய். நீ இருப்பதை உன் உடலில் எந்த இடத்தில் அறிகிறாய்? உன் இருப்பை உன் உடல் முழுவதும் நீ அறிந்தாலும், அந்த உணர்வின் அஸ்திவாரம் எங்கு நிலவுகிறது என்பதை( உன் அறிவால் அல்ல, உன் உணர்வால்) உன் உணர்வு வழியாக தேடு. இப்போது உன் உணர்வுகள் செறிவு கொண்டு, உனது முதுகு தண்டின் அடிப்பாகமான (நுனி) மூலாதாரத்தில் உணரப்படுவதை அறிகிறாயா? உன் மூல இருப்பு உணர்வு உன் மூலாதாரத்தில் வேரடித்து கிடக்கிறது. அந்த இருப்பு நிலையிலேயே லயிப்பாயாக! இது தான் உன் வசிப்பிடம். இனி நீ எழுப்ப போகும் ஆன்மீக கோபுரத்துக்கு இதுதான் அஸ்திவாரம். இங்கிருந்து லவலேசமும் விலகலாகாது. உனது இருப்பு நிலையை முழுவதும் நீ உணர்ந்த பிறகு , அஸ்திவாரம் கெட்டியாகி பலமான பிறகு, உனது இரண்டு கண்களையும் மேலே செருகி நிற்க வைத்துக்கொள். அது இரண்டும் கூலாங்கற்கள் போல் உணர்வற்று இருக்கட்டும். உனது மூலாதாரத்திலிருந்து (உனது இருப்பு நிலையால்,தண்டு வட ஊடாக) புருவ மத்தியிலுள்ள ஆக்னா சக்கரமாகிய( நெற்றிக்கண்) சுழு முனை எனப்படும் இரண்டு சுவாசங்களும் ஒன்று சேருமிடத்தை பார். உனது சுவாசம் சிறு அசைவாக அங்கேயே துடித்து நிற்க, அந்த சுவாசத்தில் உள்ள பிராணன் ஒளியாக காட்சி தரும்.அந்த ஒளியை உன் கண்களால் அல்ல, உன் இருப்பு உணர்வால் நீ காண வேண்டும்.
(எங்கும் ஒளிமட்டுமே பிரகாசமாக நிற்கும்)
உன்னையும், அந்த பேரிருப்பு மகா நிலையையும் இணைக்கும் தளம் அதுதான். அந்த ஒளியிடம் உன்னை நீ சரணடைய வைக்க வேண்டும். உன்னைப்பற்றிய உன் மதிப்பீடுகள் அனைத்தையும் நீ சரண் செய்தல் வேண்டும். முழுவதையும் நீ முழு மன சம்மதத்துடன் சரண் செய்தல் வேண்டும்.உன் ஜீவனின் அனைத்து சாரங்களையும் ஒப்புவிக்க வேண்டும். (ஏனென்றால் இது அங்கிருந்தே பெறப்பட்டது, திரும்ப அங்கேயே ஒப்படைக்கப்படுகிறது.)
இனி எதையும் அறிவதற்கு 'நீ' அங்கு இல்லை.வெறும் 'சாட்சி'யாக மட்டும் ஓர் அறிதல் ஏற்படும்.அந்த சாட்சித்தன்மை மட்டும் எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ! அவ்வளவு நேரம் அந்த சுகிப்பில் இருக்கவும்.( எங்கும் சுடரொளி, ஒளி மட்டுமே!) இந்த சுகம் உன் உடலுக்கு பரிச்சயமாகி, பழக்கமும் ஆகட்டும்.

No comments:

Post a Comment