Sunday, April 25, 2010

தரிசனம் 14

குரு: இனிமையான சாதகனே இன்னும் ஓர் பயிற்சியை செய்து பார்ப்போமா?
சாதகன்: அப்படியே ஆகட்டும் குருவே!
குரு: இதுவும் முன் சொன்னபடியே அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
சாதகன்: சரி, அப்படியே அமர்ந்து கொள்ளுகிறேன்.
குரு: கைகளை சின் முத்திரையில் வைத்து கொள்ளல் வேண்டும். கண்களை லேசாக மூடிக்கொள். முதுகு தண்டு நேராக இருக்கும்படி, நிமிர்ந்து அமர்ந்து கொள். இப்போது நீ செய்யப்போகும் இந்த சோதனை பயிற்சி- 'நான்' எனும் உனது நுகர்வு தளம் உடம்பை மையப்படுத்திய ஐம்புல உணர்வை விடுத்து , உடலின் அடிப்படை அலகான அணு தள உணர்வை, நீ அடையப்போவதைப்பற்றியது. உடலையும், மனதையும் ஒய்வுநிலையில் வைத்துக்கொள். இந்த பிரபஞ்சமே நாத மயமானது. அந்த அடி நாதமானது அணு தள உணர்வு நிலைகளிலேயே நிலவுகிறது. அந்த நாதமானது 'ஒம்'ம்ம்ம் எனும் சப்த லயமானது. உனது முழு இருப்பு நிலையான மூலாதார சக்கரத்தில் உனது உணர்வினை இருத்தி அங்கிருந்து, மேல் நோக்கி உன் முதுகு தண்டு ஏழு சக்கரத்தின் வழியாக பிரபஞ்ச இருப்பு நிலையை நோக்கி ஒம்ம்ம்ம் எனும் சப்தத்தை உச்சரிப்பாயாக! இந்த ஓம் எனும் சொல் அ-உ-ம என மூன்று பதமாக பிரிந்துள்ளது. அ வில் துவங்கும் நாதம் உன் மூல இருப்பான மூலாதாரத்தில் ஒலிக்குபடி பார்த்துக்கொள்ளல் வேண்டும். அடுத்து வரும் உ எனும் பதம் உனது முதுகு தண்டின் நடுப்பகுதியான 'இதயத்திற்கு' அருகே உள்ள அனாகத சக்கரத்தில் ஒலிக்கும்படியும் ம்ம் எனும் பதம் உச்சிபபாகமான சகஸ்ராரத்திலும் அதனையும் கடந்து அகண்டாகார வெளியிலும் சப்தம் பரவ வேண்டும். இவ்விதமாக ஒம்ம்ம்ம், ஒம்ம்ம்ம், ஒம்ம்ம்ம், ஒம்ம்ம்ம் ஒம்ம்ம்ம் என தொடர்ந்து உச்சரித்தல் வேண்டும். இந்த மந்திர தொனி லயமாகுதல் வேண்டும். உச்சரிப்பில் எந்த தயக்கமும் இன்றி வெகு இயல்பாக உச்சரித்தல் வேண்டும். அவரவர் பயிற்சி செய்யும் சூழ்நிலைக்கு ஏற்றபடி சப்தமாகவோ, அல்லது ஒரு ஐம்பதுஅடி தூரத்துக்கு கேட்கும்படியாகவோ உச்சரிப்பது வேண்டும். இந்த சப்தம் எவ்வளவு தூரத்திற்கு கேட்கிறதோ, அந்த வட்டத்திற்குள் இருக்கும் அணுக்கள் அதிர்வுக்கு எளிதில் கட்டுப்பட்டு உன் உடலில் உள்ள அணுக்களோடு ஒத்துணர்வு தொடர்பில் இருக்கும். இந்த உச்சரிப்பை ஒரு ராக பாவனையில், சீரான லயத்தில் தொடர்ந்து இடை விடாது லயித்து உச்சரித்து வர வேண்டும். ஒம்ம்ம்ம் என துவங்கி உச்சரித்து முடிக்கும் வரை உனது இருப்பு உணர்வு மூலாதாரத்தில் உந்தி எழுந்து மேல் நோக்கி சகஸ்ராரம் தாண்டி அகண்டாகார பெரு வெளியில் பரவ வேண்டும். ( நன்றாக கவனி. மேல்நோக்கி பரவுதல் உன் அறிவாலோ, அல்லது உன் மொழியாலோ அல்ல, உன்னுடைய முழு உணர்வினால் மட்டுமே மேல்நோக்கி எழுந்து சகஸ்ராரம் தாண்டி பெரு வெளி கடந்து பரவ வேண்டும். அது வெளியில் எவ்வளவு பரவுகிறதோ அவ்வளவு பெரிதாகும் உன் உணர்வு உடல். இந்த சின்ன ஸ்தூல உடல் இருப்பதை அப்போது நீ அறிய மாட்டாய். மிகுந்த ஈடுபாட்டுடன் இதை ஒரு மணி நேரத்துக்கு இடை விடாது உச்சரித்து விட்டு பின் உடல் அசைவின்றி உன் மூலாதாரத்தில் இருந்து, பிரபஞ்ச பேரிருப்பை நோக்கி அந்த பேரிருப்போடு தன்னையும் கலந்து ஒன்றிணைத்து கொள்ளும் படி இறைஞ்சுதல் வேண்டும். ( இந்த வேட்கை, உனது மனத்தாலோ, அல்லது மொழியாலான வாக்கியத்தாலோ அமைதல் கூடாது. முழு உணர்வால் மட்டுமே நடக்கவேண்டும்.) உன் உணர்வின் தவிப்பை பொறுத்தே அந்த ஒன்றிணைத்தல் சாத்தியமாகும். இப்போது உன் உடலிலுள்ள அணுக்கள் யாவும் ஒரே தேவைக்காக தவிக்கிறது தெரியும். இதுவே 'அணுத்தள' உணர்வு.

No comments:

Post a Comment