Sunday, May 2, 2010

தரிசனம் 19

குரு: இன்னும் ஒரு பயிற்சியை செய்து பார்க்கலாமா?
சாதகன்: அப்படியே ஆகட்டும் குருவே!
குரு: ஒரு நீண்ட தியானத்துக்கு பின், உன்னை முழுமையாக குருவிடம் சரண் செய்த பின், உன்னிடம் எஞ்சி இருப்பது என்ன?
சாதகன்: அப்போது ஒரு அறிநிலை மட்டும் இருக்கும் குருவே!
குரு: ஒரு நீண்ட தியானத்துக்கு பின், உன்னை முழுமையாக குருவிடம் சரண் செய்த பின்,உன்னிடம் ஒரு அறிநிலை மட்டும் இருக்கும். அதன் பின் - இந்த இடத்திலிருந்து, இப்பயிற்சியை துவங்குவோம். இப்போது நீ உன்னை ,உனது உடலை, உடலுள் நடக்கும் உணர்வை அறிய தொடங்கு. இப்போது நீ இருக்கிறாய். ( உன்னை அப்படியே முழுமையாக உனது குருவிடம் சரண் செய்தல் என்பது, உன்னுடையஒரு 'விருப்ப மரணம்' மாதிரிதானே!) அதையே மீண்டும் ஒரு முறை வேறு விதமாக நிகழ்த்தி பார்க்கலாம். உனது கற்பனையில் இது நடக்கட்டும். ஒரு உண்மையான சம்பவம்போல இது நடக்கட்டும். இந்த சம்பவத்தை உண்மையாகவே உனக்குள் நடத்தி பார்க்கிறாய்! ஒரு தர்க்க ரீதியாக, ஒரு நம்பிக்கையாக, ஒரு நிஜமான சம்பவம்போல, உன் முழு சம்மதத்துடன் இது நடக்கட்டும். 'உன்னை'ப் பொறுத்தவரை இது உண்மை.
இப்போது ஒரு விபத்தில் நீ உண்மையாகவே இறந்து விட்டாய். உடனே உன் உயிர் உனது உடலை விட்டு பிரிகிறது. நீ செய்வது இனி எதுவுமில்லை. எதுவும் செய்யவும் முடியாது. எதோ ஒரு சூட்சும காரணத்தால் அங்கு நடப்பது மட்டும் உனக்கு தெரிகிறது. உனது உடல் இனி எதற்கும் உதவாது. உடலே சிதறி கிடக்கிறது. எங்கும் செந்நிற ரத்தம். தலை நசுங்கி முகமே அடையாளம் தெரியவில்லை. இப்படியும் உடல் அலங்கோலமாகுமா! என்பது போல் உடல் அலங்கோலமாக கிடக்கிறது. அங்கு ஒரே கூட்டம். கீழே கிடக்கும் ரத்தம் கூட்டத்தின் கால்களில் மிதிபடுகிறது. ரத்தம், எலும்பு, சதை, குடல் சரிந்து கிடக்கிறது. உன் வீட்டுக்கு தகவல் போய் உன் மனைவி வருகிறாள். (அல்லது கணவன்) உன் குழந்தைகள், உனது உறவினர், உனது நண்பர்கள் உனது சுற்றம் எல்லோரையும் கடைசியாக பார்த்துக்கொள். போலீஸ் கேஸ். மருத்துவமனை, பிணவறையில் நம்முடை எதோ ஒரு சகோதரனோ, சகோதரியோ அறுத்து வெள்ளைத்துணியில் கட்டி வைத்திருக்கிறார்கள். அவனுக்கு என்ன நேர்ந்ததோ?
இப்போது உன்னையும் அறுத்து ஒரு வெள்ளைத்துணியில் போட்டு கட்டியாகி விட்டது. மீண்டும் ஆம்புலன்ஸ். இப்போ உன் வீடு. உன்னைப்பற்றி ஒவ்வொருவரும் ஒரு விதமாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். சடங்கு நடக்கிறது. . உன்னை தூக்கிக்கொண்டு போக பாடை தயார். இதெல்லாம் நிதர்சனம். இனி உன்னால் ஆகப்போவது எதுவுமில்லை. ஊர்கூடி உன் சவ யாத்திரை. சுடு காட்டில் பழைய டயர்களும், விறகு கட்டைகளும் ரெடியாக உள்ளது. உன்னை எரியூட்டப்போகிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் நீ வெறும் சாம்பல் தான். அந்த சாம்பலும் வேகமாக காற்றடித்தால் அங்கு நிற்காது. இரண்டு நாள் கழித்து வந்து பார்த்ததால், உன்னைப்போல் இன்னொருவன் எரிந்து கொண்டிருப்பான். எல்லாம் முடிந்தது. நீ இப்போது இல்லை. உனது எச்சம் கூட இல்லை. உன்னிடம் எந்த சலனமுமில்லை.எந்த விகல்பமுமில்லை. உன்னுடைய வானில் ஒரு மாசு, மருவில்லை. நிச்சலனம். எவ்வளவு நேரம் இதில் உன்னால் இருக்க முடியுமோ! அவ்வளவு நேரம் இருந்து விட்டு, கண்களை மூடிய படியே கை, கால்களை லேசாக அசைக்கவும். உடலை அசைக்கவும். உன் உடலிலுள்ள அனைத்து அங்கங்களையும் ஓட விடவும். லேசாக சுவாச ஓட்டத்தை கவனித்த படி கொஞ்சம், கொஞ்சமாக கண் விழித்து வெளி உலகை காணவும். இப்போது நீ உயிருடன் இருக்கிறாய். இது உனக்கு கிடைத்த இரண்டாவது வாழ்க்கை. இனி இன்றைக்கு நடக்கும் சம்பவங்களை கூர்ந்து கவனி. உனக்குள் இருக்கும் உன் 'பதிவகள்' எப்படி விளையாடுகிறது என்பதை.

Saturday, May 1, 2010

தரிசனம் 18

குரு:அவரவர் பெற்றிருக்கும் பொது அறிவினை கைப்பிடித்து , அவரவர் தர்க்க அறிவு நடக்கிறது. அவரவர் பெற்றிருக்கும் தர்க்க அறிவினை கைப்பிடித்து அவரவர் நம்பிக்கை நடக்கிறது. அவரவர் நம்பிக்கையை கைப்பிடித்து அவரவர் உண்மை நடக்கிறது. அவரவர் நம்புவது மட்டும் அவரவர்க்கு உண்மை. அவரவர் உண்மையை கைப்பிடித்து அவரவர் வாழ்க்கை நடக்கிறது. -(இதுவே பூரண உண்மை)- நீ உனது குருவிடம் , உன் பொது அறிவு, உன் தர்க்க அறிவு,உன் நம்பிக்கை, உன் உண்மை, உன் வாழ்க்கை அனைத்தையும் சமர்பித்தல் வேண்டும்.நீ சமர்பித்து நிராயுத பாணியாக நின்றால்,இப்போது
அந்த பூரண உண்மை உன்னை வழிநடத்தும்.
மனிதப்பிறவியின் முக்கிய நோக்கமே உண்மையை அறிவதுதான். இதற்கு அந்த 'பூரண உண்மையே' வழிகாட்ட வேண்டும். மனம் என்ற ஆகாயத்தில் (வெட்ட வெளியில்) மூளையின் எண்ணங்கள், சிந்தனைகள், நினைவுகள் என சுழன்றுகொண்டிருக்கின்றன, அதனால் உண்மையை அறியும் வழி நழுவி விடுகிறது. நீ கற்றதை, கேட்டதை, எண்ணியதை நீக்கி, உனக்குள் இருக்கும் அந்த தூய தெளிந்த (வெட்ட வெளி) ஆகாயத்தில் சஞ்சரிக்கும் உத்தியை கற்றுக்கொள்ளுதல் வேண்டும். இனி, அந்த 'பூரண உண்மை' வழிகாட்டும்.

Wednesday, April 28, 2010

தரிசனம் 17

சாதகன்: "ஒவ்வொரு க்ஷணமும் உண்மையாக
உள்ள தன்னுணர்வில் மட்டும் இரு!" என சொன்னீர்கள். அது ஒரு 'வேலை'போல அவ்வப்போது தன் முனைப்போடு செய்ய வேண்டியுள்ளதே?
குரு: இன்னும் சொல்!
சாதகன்: என்னுடைய 'நான்' எனும் அறிவு நிலை என்னை கஷ்டப்படுத்தியது இல்லை. ( தூக்கத்திலிருந்து எழுந்தவுடன்) அது லாவகமாகவே நான் என கூடிக்கொள்ளும். அப்படி அது கூடிக்கொள்வதுகூட , சில சமயம் எனக்கு தெரியாது. அது தான் நம் இயல்பு போல வெகு சுலபமாக இருக்கிறது. இந்த தன்னுணர்வில் என்னை நிறுத்த கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அது தொந்தரவாகவும் இருக்கிறது.அது கொஞ்சம் செயற்க்கையாகக்கூட தோன்றுகிறது.
குரு: எனக்கு விருப்பமான சாதகனே கேள். காலையில் நீ தூக்கம் விழித்தவுடன் உன் கண்களை கசக்கிக் கொண்டு புற உலகை நீ காணும் பொழுது நான் பாதுகாப்புடன் இருக்கிறேனா? என்று நீ உன்னை கேட்டுக்கொள்ளும் கேள்விதான், நீ சுற்றும் முற்றும் பார்த்துக்கொள்வது. அப்போது அந்த 'நான்' சற்று உறுதியடைகிறது.இன்றைக்கு நம்முடைய பணி என்ன?என நீ யோசிப்பது- 'நம்முடைய' எனும் பதம் உன்னுடைய 'நான்'.- உன்னை சுற்றி உன் மனைவி, உன் பிள்ளைகள், உன் குடும்பம் - இதுவும் உன்னுடைய 'நான்' தான். இதெல்லாம் உன்னுடைய 54 வருட பழக்கம் மட்டுமல்ல! இது நீ இங்கு வருவதற்கான 'வழி'யாகிய உன் அடுக்கடுக்கான மரபினிலேயே பதிவாகி இருக்கிறது. இப்படி
நீ தூங்கி 'எழும்பொழுது' ஒவ்வொரு முறையும் நடக்கிறது.இது ஒரு அனிச்சை செயலாகவே மாறிவிட்டிருக்கிறது. அதனாலேயே, இயல்பு போல வெகு சுலபமாக இருக்கிறது.உனக்கு தன்னுணர்வில் இருப்பது 'இயல்பாக/ மாறிவிட்டால், அந்த தருணமே யாம் உன்னை ஆட்கொள்வோம்.
சாதகன்: நன்றி குருவே!

தரிசனம் 16

குரு: இந்த பயிற்சியில் ஓர் அதிசயத்தை கண்டாயா?
சாதகன்: அதிசயமா? எனக்கு தெரியவில்லையே!
குரு: உனக்கு புருவமத்தியில் ஒளி எழுந்ததா?
சாதகன்: ஆம், ஒளி எழுந்தது குருவே! கொஞ்ச நேரம் அந்த ஒளியுலகில் நீடிக்கவும் செய்தேன். அங்கு நானே இல்லை. ஆனால் ஓர் அறிதல் மட்டும் இருந்தது. அது சுகமாகவும் இருந்தது. அது பேதமற்ற நிலை.
குரு: இன்னொன்றை கவனித்தாயா? .
சாதகன்: சொல்லுங்கள் குருவே!
குரு: அப்போது உனது மனம் எங்கிருந்தது?
சாதகன்: ஆம், குருவே! இந்த நிகழ்வின் போது மனம் காணப்படவே இல்லை!.
குரு: இதுதான் அதிசயம். உனக்கு வயது எத்தனை?
சாதகன்: எனக்கு 54 வயது ஆகிறது.
குரு: இவ்வளவு காலம் நீ எப்போதாவது உன் மனம் காணாமல் போய் பார்த்திருக்கிறாயா?
சாதகன்: குருவே நான் தூங்கினாலும் என் மனம் தூங்கி நான் பார்த்ததில்லை. அது சதா பரபரப்புடன் தான் இருக்கும், காரணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அது அப்படித்தான். அது ஒரு நொடியும் சும்மா இருந்ததில்லை. காரண, காரியமின்றி நினைவு தொடர்களில் தாவி, தாவி போய்க்கொண்டே இருக்கும். அதை பின் தொடர்ந்து, பின் தொடர்ந்து அலுத்துப்போய் விட்டேன்.
குரு: மேலும் உன் வாழ்க்கையைப் பற்றி சொல்.
சாதகன்: குருவே இந்த வாழ்க்கையில் எதுவும் சுவாரஸ்யம் இல்லை. ஓர் 54 வருட அனுபவ நினைவை தவிர இதில் வேறென்ன இருக்கிறது? ஒரு விபத்தோ, ஒரு இடரோ வந்து இறந்தால் ஒழிய, இன்னும் பத்து வருடத்திற்கு தாங்கும் இந்த உடல் ஆரோக்கியம். ஒரு பத்து வருடம் கழித்து நான் இறந்து விட்டால், ஒரு 64 வருட அனுபவ நினைவு மட்டுமே மீதி. இந்த அனுபவ நினைவு மட்டும்தான் வாழ்க்கையா? இந்த வாழ்வின் சாராம்சம் வெறும் அனுபவம் மட்டும் தானா?
குரு: நீ என்னோடு இணைவதற்கு தகுதியாகி விட்டாய். நீ தொடர்ந்து உன் உடலில் உள்ள உணர்வை மட்டும் அறிந்து கொண்டு வா! சீட்டை கலைத்துப்போட்டு சூது விளையாடும், மனதின் பின்னால் போகாதே! எப்போதும் ஒவ்வொரு க்ஷணமும் உண்மையாக
உள்ள தன்னுணர்வில் மட்டும் இரு! கற்பனையான எண்ண தொடர்ச்சியின் பின்னால் போகாதே!

தரிசனம் 15

குரு:சாதகனே இப்போது ஒரு சிறு பயிற்சி செய்து பார்க்கலாமா?
சாதகன்: சொல்லுங்கள் குருவே!
குரு: இந்த பயிற்சியை செய்யும்பொழுது வயிறு காலியாக இருக்க வேண்டும். ஆரோக்யமான உடல்நிலையில் இருக்கவேண்டும். இரண்டு நாசியிலும் ஒரு சேர காற்று வந்து போக வேண்டும். மனமோ, உடலோ பதட்டமின்றி இருக்க வேண்டும். சரியா?
சாதகன் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன் குருவே!
குரு: சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை நோக்கி அமரவேண்டும். நீ அமரும் ஆசனம், பருத்தியாலான துணியாலோ, கோரையினாலான பாயாகவோ இருக்கலாம்.( புவி ஈர்ப்பு விசையை, பூமி வலுவாக உன்மீது செலுத்த முடியாத அளவுக்கு ஒருபொருளாக இருக்கட்டும்) நிமிர்ந்து முதுகு தண்டை நேராக வைத்து பத்மாசனத்தில் அமரவும். லேசாக கண்களை மூடவும். இரண்டு கைகளையும் முழங்கால் மீது சின் முத்திரையில் வைத்துக்கொள்ளவும். உனது முழு கவனத்தையும் உனக்கு உள்ளேயே வைத்திருக்கவும். கவனம் உனக்குள்ளேயே லயித்த பிறகு, நீ இருப்பதை , உனது இருப்பை கவனி. ( நீ இறந்து போயிருந்தால், உன் இருப்பை உன்னால் கவனிக்க முடியாது அல்லவா! நீ இப்போது உயிருடனே இருக்கிறாய். நீ இருப்பதை உன் உடலில் எந்த இடத்தில் அறிகிறாய்? உன் இருப்பை உன் உடல் முழுவதும் நீ அறிந்தாலும், அந்த உணர்வின் அஸ்திவாரம் எங்கு நிலவுகிறது என்பதை( உன் அறிவால் அல்ல, உன் உணர்வால்) உன் உணர்வு வழியாக தேடு. இப்போது உன் உணர்வுகள் செறிவு கொண்டு, உனது முதுகு தண்டின் அடிப்பாகமான (நுனி) மூலாதாரத்தில் உணரப்படுவதை அறிகிறாயா? உன் மூல இருப்பு உணர்வு உன் மூலாதாரத்தில் வேரடித்து கிடக்கிறது. அந்த இருப்பு நிலையிலேயே லயிப்பாயாக! இது தான் உன் வசிப்பிடம். இனி நீ எழுப்ப போகும் ஆன்மீக கோபுரத்துக்கு இதுதான் அஸ்திவாரம். இங்கிருந்து லவலேசமும் விலகலாகாது. உனது இருப்பு நிலையை முழுவதும் நீ உணர்ந்த பிறகு , அஸ்திவாரம் கெட்டியாகி பலமான பிறகு, உனது இரண்டு கண்களையும் மேலே செருகி நிற்க வைத்துக்கொள். அது இரண்டும் கூலாங்கற்கள் போல் உணர்வற்று இருக்கட்டும். உனது மூலாதாரத்திலிருந்து (உனது இருப்பு நிலையால்,தண்டு வட ஊடாக) புருவ மத்தியிலுள்ள ஆக்னா சக்கரமாகிய( நெற்றிக்கண்) சுழு முனை எனப்படும் இரண்டு சுவாசங்களும் ஒன்று சேருமிடத்தை பார். உனது சுவாசம் சிறு அசைவாக அங்கேயே துடித்து நிற்க, அந்த சுவாசத்தில் உள்ள பிராணன் ஒளியாக காட்சி தரும்.அந்த ஒளியை உன் கண்களால் அல்ல, உன் இருப்பு உணர்வால் நீ காண வேண்டும்.
(எங்கும் ஒளிமட்டுமே பிரகாசமாக நிற்கும்)
உன்னையும், அந்த பேரிருப்பு மகா நிலையையும் இணைக்கும் தளம் அதுதான். அந்த ஒளியிடம் உன்னை நீ சரணடைய வைக்க வேண்டும். உன்னைப்பற்றிய உன் மதிப்பீடுகள் அனைத்தையும் நீ சரண் செய்தல் வேண்டும். முழுவதையும் நீ முழு மன சம்மதத்துடன் சரண் செய்தல் வேண்டும்.உன் ஜீவனின் அனைத்து சாரங்களையும் ஒப்புவிக்க வேண்டும். (ஏனென்றால் இது அங்கிருந்தே பெறப்பட்டது, திரும்ப அங்கேயே ஒப்படைக்கப்படுகிறது.)
இனி எதையும் அறிவதற்கு 'நீ' அங்கு இல்லை.வெறும் 'சாட்சி'யாக மட்டும் ஓர் அறிதல் ஏற்படும்.அந்த சாட்சித்தன்மை மட்டும் எவ்வளவு நேரம் நீடிக்கிறதோ! அவ்வளவு நேரம் அந்த சுகிப்பில் இருக்கவும்.( எங்கும் சுடரொளி, ஒளி மட்டுமே!) இந்த சுகம் உன் உடலுக்கு பரிச்சயமாகி, பழக்கமும் ஆகட்டும்.

Monday, April 26, 2010

சாதகன் தரும் ஒரு தகவல்

சாதகன் : சுமார் நான்கு வருடங்களுக்கு முன் சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியில் ஈஷா யோகா தியான பயிற்சி மையம் ஒரு வார கால பயிற்சி வகுப்பை நடத்தி வந்தது. அதில் சுமார் ஐம்பது பேர் கலந்து கொண்டோம். பயிற்சியை பிரம்மசாரிணி வத்சலா என்பவர் நடத்தி வந்தார். எனக்கு தீட்சை அளித்தவரும் அவரே! எனது முதல் குரு அவரே!
ஒரு வார கால பயிற்சி முடிந்து நிறைவு நாள் நன்றி கூறும் நிகழ்ச்சி. அப்போது வத்சலாகுரு சொன்ன ஒரு தகவல். சேலம் அருகே ஒரு ஊரில் உயர்நிலை பள்ளி ஒன்றில் தொடர்ந்து இரண்டு வருடம் ஐந்து வகுப்புகள் ( ஆறு மாத இடை வெளிகளில்) நடந்து இருக்கிறது.அந்த வகுப்புகளை இவர்தான் நடத்தி வந்திருக்கிறார்.அந்த ஐந்தாவது வகுப்பு முடிந்து நன்றி கூறும் நிகழ்ச்சியில் குரு வத்சலா அவர்கள் அந்த பள்ளியின் வாட்சுமேன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் அந்த வாட்சுமேன் நா தழு, தழுக்க கண்ணீர் மல்கி சொன்ன ஒரு விஷயம் " நான் இந்த பள்ளியில் பதினைந்து வருடமாக இருக்கிறேன். இந்த பள்ளி வளாகத்திற்குள் ஒரு வேப்பமரம் நீண்ட காலமாக ஒரு பூ பூத்ததில்லை, ஒரு காய், காய்த்ததில்லை. அது மலட்டு மரமாகவே இருந்து வந்தது. நீங்கள் எல்லாம் இங்கு வந்து தியான பயிற்சி நடத்தி வருவதினால் இந்த மரம் இந்த வருடம் ஏகப்பட்ட பூவும், ஏகப்பட்ட காயும் காய்த்திருக்கிறது வாருங்கள் எனக்கூறி அனைவரையும் கொண்டு போய் காட்டியிருக்கிறார். இது பற்றி வத்சலா அவர்கள் சற்குரு ஜக்கி வாசுதேவ்
அவர்களிடம் கேட்க சற்குரு ஜக்கி வாசுதேவ்
சொன்னபதில்"வகுப்பில் உள்ள அனைவரும் ஒன்று சேர ஓம்ம்ம்ம் உச்சரிப்பை தொடர்ந்து உச்சரித்து வந்ததாலேயே அந்த அதிர்வலைகளால் அந்த மரத்துக்குண்டான 'அணுக்கருவில்'முடம் நீங்கி இருக்கிறது" என்பது. ஒரு மரமே அருகில்இருந்து வந்த ஒம்ம்ம்ம் நாதத்திற்க்கு முடம் நீங்கியது என்றால் ? இந்த ஒம்ம்ம்ம் நாதத்தை பற்றி மேலும் என்ன சொல்ல?

Sunday, April 25, 2010

தரிசனம் 14

குரு: இனிமையான சாதகனே இன்னும் ஓர் பயிற்சியை செய்து பார்ப்போமா?
சாதகன்: அப்படியே ஆகட்டும் குருவே!
குரு: இதுவும் முன் சொன்னபடியே அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
சாதகன்: சரி, அப்படியே அமர்ந்து கொள்ளுகிறேன்.
குரு: கைகளை சின் முத்திரையில் வைத்து கொள்ளல் வேண்டும். கண்களை லேசாக மூடிக்கொள். முதுகு தண்டு நேராக இருக்கும்படி, நிமிர்ந்து அமர்ந்து கொள். இப்போது நீ செய்யப்போகும் இந்த சோதனை பயிற்சி- 'நான்' எனும் உனது நுகர்வு தளம் உடம்பை மையப்படுத்திய ஐம்புல உணர்வை விடுத்து , உடலின் அடிப்படை அலகான அணு தள உணர்வை, நீ அடையப்போவதைப்பற்றியது. உடலையும், மனதையும் ஒய்வுநிலையில் வைத்துக்கொள். இந்த பிரபஞ்சமே நாத மயமானது. அந்த அடி நாதமானது அணு தள உணர்வு நிலைகளிலேயே நிலவுகிறது. அந்த நாதமானது 'ஒம்'ம்ம்ம் எனும் சப்த லயமானது. உனது முழு இருப்பு நிலையான மூலாதார சக்கரத்தில் உனது உணர்வினை இருத்தி அங்கிருந்து, மேல் நோக்கி உன் முதுகு தண்டு ஏழு சக்கரத்தின் வழியாக பிரபஞ்ச இருப்பு நிலையை நோக்கி ஒம்ம்ம்ம் எனும் சப்தத்தை உச்சரிப்பாயாக! இந்த ஓம் எனும் சொல் அ-உ-ம என மூன்று பதமாக பிரிந்துள்ளது. அ வில் துவங்கும் நாதம் உன் மூல இருப்பான மூலாதாரத்தில் ஒலிக்குபடி பார்த்துக்கொள்ளல் வேண்டும். அடுத்து வரும் உ எனும் பதம் உனது முதுகு தண்டின் நடுப்பகுதியான 'இதயத்திற்கு' அருகே உள்ள அனாகத சக்கரத்தில் ஒலிக்கும்படியும் ம்ம் எனும் பதம் உச்சிபபாகமான சகஸ்ராரத்திலும் அதனையும் கடந்து அகண்டாகார வெளியிலும் சப்தம் பரவ வேண்டும். இவ்விதமாக ஒம்ம்ம்ம், ஒம்ம்ம்ம், ஒம்ம்ம்ம், ஒம்ம்ம்ம் ஒம்ம்ம்ம் என தொடர்ந்து உச்சரித்தல் வேண்டும். இந்த மந்திர தொனி லயமாகுதல் வேண்டும். உச்சரிப்பில் எந்த தயக்கமும் இன்றி வெகு இயல்பாக உச்சரித்தல் வேண்டும். அவரவர் பயிற்சி செய்யும் சூழ்நிலைக்கு ஏற்றபடி சப்தமாகவோ, அல்லது ஒரு ஐம்பதுஅடி தூரத்துக்கு கேட்கும்படியாகவோ உச்சரிப்பது வேண்டும். இந்த சப்தம் எவ்வளவு தூரத்திற்கு கேட்கிறதோ, அந்த வட்டத்திற்குள் இருக்கும் அணுக்கள் அதிர்வுக்கு எளிதில் கட்டுப்பட்டு உன் உடலில் உள்ள அணுக்களோடு ஒத்துணர்வு தொடர்பில் இருக்கும். இந்த உச்சரிப்பை ஒரு ராக பாவனையில், சீரான லயத்தில் தொடர்ந்து இடை விடாது லயித்து உச்சரித்து வர வேண்டும். ஒம்ம்ம்ம் என துவங்கி உச்சரித்து முடிக்கும் வரை உனது இருப்பு உணர்வு மூலாதாரத்தில் உந்தி எழுந்து மேல் நோக்கி சகஸ்ராரம் தாண்டி அகண்டாகார பெரு வெளியில் பரவ வேண்டும். ( நன்றாக கவனி. மேல்நோக்கி பரவுதல் உன் அறிவாலோ, அல்லது உன் மொழியாலோ அல்ல, உன்னுடைய முழு உணர்வினால் மட்டுமே மேல்நோக்கி எழுந்து சகஸ்ராரம் தாண்டி பெரு வெளி கடந்து பரவ வேண்டும். அது வெளியில் எவ்வளவு பரவுகிறதோ அவ்வளவு பெரிதாகும் உன் உணர்வு உடல். இந்த சின்ன ஸ்தூல உடல் இருப்பதை அப்போது நீ அறிய மாட்டாய். மிகுந்த ஈடுபாட்டுடன் இதை ஒரு மணி நேரத்துக்கு இடை விடாது உச்சரித்து விட்டு பின் உடல் அசைவின்றி உன் மூலாதாரத்தில் இருந்து, பிரபஞ்ச பேரிருப்பை நோக்கி அந்த பேரிருப்போடு தன்னையும் கலந்து ஒன்றிணைத்து கொள்ளும் படி இறைஞ்சுதல் வேண்டும். ( இந்த வேட்கை, உனது மனத்தாலோ, அல்லது மொழியாலான வாக்கியத்தாலோ அமைதல் கூடாது. முழு உணர்வால் மட்டுமே நடக்கவேண்டும்.) உன் உணர்வின் தவிப்பை பொறுத்தே அந்த ஒன்றிணைத்தல் சாத்தியமாகும். இப்போது உன் உடலிலுள்ள அணுக்கள் யாவும் ஒரே தேவைக்காக தவிக்கிறது தெரியும். இதுவே 'அணுத்தள' உணர்வு.

Saturday, April 24, 2010

தரிசனம் 13

குரு: பிரியத்திற்குரிய சாதகனே இப்போது ஒரு சிறு பயிற்சி செய்து பார்க்கலாமா?
சாதகன்: சொல்லுங்கள் குருவே பயிற்சியை செய்து பார்க்கலாம்.
குரு: இந்த பயிற்சியை செய்யும்பொழுது வயிறு காலியாக இருக்க வேண்டும். ஆரோக்யமான உடல்நிலையில் இருக்கவேண்டும். இரண்டு நாசியிலும் ஒரு சேர காற்று வந்து போக வேண்டும். மனமோ, உடலோ பதட்டமின்றி இருக்க வேண்டும். சரியா?
சாதகன் என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்கிறேன் குருவே!
குரு: சூரியன் உதிக்கும் கிழக்கு திசையை நோக்கி அமரவேண்டும். நீ அமரும் ஆசனம், பருத்தியாலான துணியாலோ, கோரையினாலான பாயாகவோ இருக்கலாம்.( புவி ஈர்ப்பு விசையை, பூமி வலுவாக உன்மீது செலுத்த முடியாத அளவுக்கு ஒருபொருளாக இருக்கட்டும்) நிமிர்ந்து முதுகு தண்டை நேராக வைத்து பத்மாசனத்தில் அமரவும். லேசாக கண்களை மூடவும். இரண்டு கைகளையும் முழங்கால் மீது சின் முத்திரையில் வைத்துக்கொள்ளவும். உனது முழு கவனத்தையும் உனக்கு உள்ளேயே வைத்திருக்கவும். கவனம் உனக்குள்ளேயே லயித்த பிறகு, நீ இருப்பதை , உனது இருப்பை கவனி. ( நீ இறந்து போயிருந்தால், உன் இருப்பை உன்னால் கவனிக்க முடியாது அல்லவா! நீ இப்போது உயிருடனே இருக்கிறாய். நீ இருப்பதை உன் உடலில் எந்த இடத்தில் அறிகிறாய்? உன் இருப்பை உன் உடல் முழுவதும் நீ அறிந்தாலும், அந்த உணர்வின் அஸ்திவாரம் எங்கு நிலவுகிறது என்பதை( உன் அறிவால் அல்ல, உன் உணர்வால்) உன் உணர்வு வழியாக தேடு. இப்போது உன் உணர்வுகள் செறிவு கொண்டு, உனது முதுகு தண்டின் அடிப்பாகமான (நுனி) மூலாதாரத்தில் உணரப்படுவதை அறிகிறாயா? உன் மூல இருப்பு உணர்வு உன் மூலாதாரத்தில் வேரடித்து கிடக்கிறது. அந்த இருப்பு நிலையிலேயே லயிப்பாயாக! இது தான் உன் வசிப்பிடம். இனி நீ எழுப்ப போகும் ஆன்மீக கோபுரத்துக்கு இதுதான் அஸ்திவாரம். இங்கிருந்து லவலேசமும் விலகலாகாது. உனது இருப்பு நிலையை முழுவதும் நீ உணர்ந்த பிறகு , அஸ்திவாரம் கெட்டியாகி பலமான பிறகு, இந்த பிரபஞ்ச பேரிருப்பு நிலையை நோக்கி உனது உணர்வு நிலைகளை மேல்நோக்கி செலுத்துவாயாக! உனது முதுகு தண்டில் அமைந்துள்ள ஏழு சக்கர நிலைகளின் வழியே சகஸ்ராரத்தையும் தாண்டி அந்த எல்லையற்ற அண்ட சராசர பெரு வெளியில் இயங்கும் அப்பிரபஞ்ச பேரிருப்பு நிலையை தியானிப்பாயாக!இப்போது
தியானத்தை 'கூட' விடாமல் ( உனது இருப்பு நிலைக்கும், பிரபஞ்ச பேரிருப்பு நிலைக்கும் நடுவே ஒரு படலம் தோன்றுகிறதா?) அது தான் உன் சிலேட்டு. நீ கிறுக்குவதும், எழுதுவதும்,அழிப்பதுமான உன் மனம். இது உன் கையில் கிடைத்த கொட்டாங்குச்சி, இதிலே தான் மண்ணையும்,தண்ணீரையும் விட்டு குழப்பி நீ சோறு சமைக்கிறாய்) இதை தோற்றுவிப்பது வேறு எதுவும் இல்லை. பூமியின் வலுவான ஈர்ப்புவிசையே! உனது உணர்வே ஒரு பொருள்தான்.(material)(அந்த பேரிருப்பின் உணர்விலிருந்து எழுந்த எண்ணம் தான் இந்த பிரபஞ்சமே!)
அந்த பொருளை நீ புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக மேல் நோக்கி தூக்கவே, பூமியை நோக்கி ஈர்ப்புவிசை கீழ்நோக்கி இழுப்பதே உனது மனமாக(எண்ணங்களாக)
பாவிக்க படுகிறது. இந்த மனதின் விளையாட்டை ரசிக்காமல், பிரபஞ்ச பேரிருப்பின் அருள்மிக்க கருணாசாகரத்தை நோக்கி, ஒரு சுகத்தன்மையோடு முன்னேற, முன்னேற உணர்வு ஆனந்தம்பெறும்.
மனம் சாந்தம் பெறும்.
இந்த பயிற்சிக்கு பின்
உனது உணர்வு தன்மையை உன் இருப்பு நிலையில் நிறுத்தி வைக்கமுடியும். தேவை இல்லாமல் மனதின் விளையாட்டுக்கு பின்னால் உணர்வு ஓடாது.

Friday, April 23, 2010

தரிசனம் 12

குரு: எனது இனிய சாதகனே ஆழ்ந்து கேள்.ஒவ்வொரு தனி அணுவுமே பேருயிர்ப்பு, பேராத்மா, பேரறிவு, பேருணர்வு கொண்டது.

Thursday, April 22, 2010

தரிசனம் 11

குரு: சாதகனே மீண்டும் கவனமாக கேள். இந்த பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு தனி அணுவிலும், முழுபிரபஞ்சத்தின் பரிபூரண பேரறிவுநிலைகள் அடங்கி விரவிக்கிடக்கிறது.

தரிசனம் 10

குரு: ஆர்வமுள்ள சாதகனே நன்றாக கவனி, ஆத்மாவுக்கு கால நேரம் இல்லை. தேச நிலை இல்லை. பிரபஞ்ச துவக்கமும், பிரபஞ்ச ஒடுக்கமும் ஆன அனைத்தையுமே உள்ளடங்கியது இவ்வாத்மா! முயற்சி செய்து ஆத்மாவை அறி.

தரிசனம் 9


குரு: இந்த பிரபஞ்சமே அணுக்களால் கட்டப்பட்டிருக்கிறது. நீயும் அணுக்களாலேயே கட்டப்பட்டிருக்கிறாய். (உயிரினங்களின் செல்களில் அணுவின் இயக்கமே அடிப்படையாக அமைந்துள்ளது!.) இங்கு எல்லா பொருட்களுமே அணுக்களால் கட்டப்பட்டிருக்கிறது.இங்கு எது ஒன்றையும் எடுத்து சிதைத்துக்கொண்டே போனால் மிஞ்சி நிற்பது அணுவே! அணுசெயல்களின் விகசிப்பே மண், மரம், நீர், காற்று,மலை,மற்றும் இங்கு காணக்கூடிய அனைத்தும். மூலக்கூறுகளால் வேறு, வேறு ஆனாலும், அடிப்படையில் அனைத்துமே அணுக்களால் கட்டப்பட்டிருப்பவையே! இந்த வீடு, இந்த ஊர் , இந்த மாநிலம், இந்த நாடு, இந்த உலகு, இந்த பூமி, அந்த நிலவு, சூரிய மண்டலம், பால்வீதி மண்டலம்,( தொலை நோக்கிகளுக்கு புலனாகும் கேலக்ஸ்சிகளின் எண்ணிக்கை பத்தாயிரம் கோடி. நம் பால்வீதியில் உள்ள கேலக்ஸ்சிகளின் எண்ணிக்கை இருபத்து நாலு. நமது சூரியன் நம் கேலக்ஸ்சியின் மையத்திலிருந்து முப்பத்து இரண்டாயிரம் ஒளி ஆண்டுகள் இடைவெளிக்கு அப்பால் உள்ளது. நமது பால்வீதிக்கு அருகாமையில் உள்ள ஆண்ட்ரோமேடா கேளக்ஸ்சி இருபது லட்சம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.)
ஏன் பிரபஞ்சமே, முழுவதும் அணுக்களால் ஆனது. இங்கு அனைத்து பொருள்களின்அலகும் அணுவே! ஆகவே உனது ஆத்மாவும், இன்ன பிறவற்றின் ஆத்மாவும் நிலவுகிற தளம் அணுவே! உன் ஆத்மாவும் அணு தளத்திலே தான் இயங்குகிறது, பிரபஞ்சத்தின் ஆத்மாவும் அணு தளத்திலே தான் இயங்குகிறது . இருவருக்குமே வேறு,வேறு ஆத்மாக்கள் இல்லை. இருப்பது ஒரே ஆத்மா,அது பேராத்மா.அனைத்துக்கும் அலகானஅது அணு தளத்தில் இயங்குகிறது. நீ உனது ஆத்மாவை உனது அணுத்தளத்தில் தேடாமல், அணுக்களால் கட்டப்பெற்ற மூலக் கூறுகளான திசு, திசு கூட்டங்களால் கட்டப்பெற்ற உடல் உறுப்பு, உடல் உறுப்புகளால் ஒன்றுபட்ட உடல் என பல பரிணாம நிலையை தாண்டி, நீ உனது ஆத்மாவை உடல் தளத்தில் எண்ணிக்கொண்டு இருக்கிறாய். இதுவே நீ சத்தியத்தை அறிவதற்கு தடையாக இருக்கிறது. இந்த உடல் தளத்திலிருந்து உன் ஆத்மாவை நீ தேட , உன் தேடலின் விளக்கமும் உன்ஐம்புலன் வழியாகவே விருத்தியாகிறது. எது ஒன்றையும் அதை முழுமையாக அறிய வேண்டின் அதன் மூலத்திற்கு செல்லுதல் வேண்டும். (நமது உடலிலிருந்து (எந்த உறுப்பிலிருந்தும்)ஓர் அணுவளவு வெட்டி எடுத்து குளோனிங் தொழில் நுட்பத்தில், இன்னொரு, நமது முழு உடலையே (எந்த குறைவும் இல்லாது.) செய்து விட முடிகிறது. வெட்டி எடுக்கப்பட்ட 'அணுவளவை' நம் கண்ணால் கூட காண முடியாது. (சூட்சும தேகம்?) நமது உடலில் ஒவ்வொரு அணுவிலும் நமது மூல உடல் (சூட்சும தேகம்)இருக்கிறது. நமக்குள் எந்த மாற்றத்தை நாம் ஏற்ப்படுத்துவதாக இருந்தாலும், நமது மூல உடலான அணு தளத்தில் உள்ள நமது மூல உடல் (சூட்சும தேகம்) தளத்திலேயே மாற்றத்தை நிகழ்த்த வேண்டும்.)
உன்னை நீ அறிய உனது மூலத்தின் மூலமே மட்டும் சாத்தியமாகும். அணுக்களை தவிர 'நிலவுகிற' அனைத்து வடிவுமே மாயா!

Wednesday, April 21, 2010

தரிசனம் 8

குரு: ஒரு ஆழ்ந்த நீண்ட தியான பொழுதில், நிசப்தமான தியானத்தில், உடல் அசைவற்று, உடல் உறுப்புகள் அசைவற்று, உடலிலுள்ள திசுக்கள் அசைவற்று அனைத்தும் முழு ஒய்வு நிலைக்கு வரும்போது, சுவாசம் வலது நாசியும், இடது நாசியும் சேர்ந்து பிரியும் இடத்திலேயே (ஆக்ஞா) சிறு அசைவாக நிற்க, உடல் முழுவதும், தன் 'அலகா'ன அணு தளத்திற்கு(அனைத்து அணுக்களும் ஒரே லயமாகி) கூட்டுறவாக--இப்போது உன் காட்சி நுகர்வுக்கு ஒளிரும் ஒளிமயமாகவும், உனது சப்த நுகர்வுக்கு "ம்ம், ம்ம், ம்ம்" என்கிற பிரபஞ்ச நாத மயமாகவும் , உடல் உணர்வு நுகர்வுக்கு முழு ஓய்வும், ஆனந்த சுக மயமாகவும் ஆக- உன் ஐம்புல உணர்வில் மூன்று புல உணர்வு மட்டுமே சற்று புலப்படும். மனம் இதில் லயமானால், விகல்பமற்று,நிர்விகல்பமாகி சாந்த ஸ்வரூபமடையும்.

Tuesday, April 20, 2010

தரிசனம் 7

குரு: உனது நான் எனும் கருத்துருவை ,கவனத்தை உடல் சார்ந்த தளத்தில் தவழவிடாது, அணு தளத்தில் இயங்கவிட்டால்,
உனக்கு மரணம் சம்பவிக்கும்போதும், நீ மரணிக்காமல் எமது நிலையோடு ஐய்க்கியமாகி நிற்ப்பாய். பிறப்பு, இறப்பை கடந்த
பரிபூரண நிலைஅது. இந்த நிலையை நீ உயிருடன் இருக்கும்பொழுதே அனுபவிக்க முடியும்.நீ, உயிருடன் இருக்கும்பொழுதே, உன் மரணத்தை கடந்து வரமுடியும்.
இங்கேயே, இப்போதே! அது உன் கைவசமே உள்ளது.அந்த
பரிபூரணநிலை எங்கும் நீக்கமற நிறைந்தேயுள்ளது.நீதான் உன் அறியாமையால் உனக்கு தடை ஏற்ப்படுத்தி வைத்திருக்கிறாய். 'நான்' எனும் உடல் சார்ந்த கருத்துருவே அந்த தடை.

தரிசனம் 6

சாதகன்: இப்போது என்னைப்பற்றி நான் எண்ணிக்கொண்டு இருக்கும் 'நான்' என்பது பொய்யா?
குரு: அது மாயை.
சாதகன்: எனக்கு பிரத்யட்சமாக காண்கிறதே?
குரு:பிரத்யட்சமாக காணலாம், ஆனால், அது மாற்றமுடையது, நிலையானது அல்ல! மாயை.
சாதகன்:மாற்றமே இல்லாத, நிலையான நான் ஒன்று உண்டா?
குரு:அதற்க்கு சாட்சியமே யாம். நீயும் நானேயன்றி பிரிதில்லை
சாதகன்: உதாரணங்கள் மூலம் எனக்கு விளக்குங்களேன்.
குரு: ஆகட்டும்.

தரிசனம் 5

குரு: ஒரு மனிதன் இங்கு வருவதற்கும், இங்கு ஜீவிப்பதற்க்கும்
மூல காரணிகள், பிரபஞ்ச காரணிகளே! அவனது ஜீவிதமே அவனுக்கு வெளியிலிருந்து தான் கொடுக்கப்படுகிறது. தாய், தந்தை ஒரு நிமித்தம் மட்டுமே! (அவர்கள் பிரபஞ்ச கருவிகள்)ஒளியாகட்டும், வெப்பமாகட்டும்,காற்று ஆகட்டும், நீராகட்டும், உணவு ஆகட்டும் அனைத்துமே அவனுக்கு, அவனுக்கு வெளியிலிருந்தே கிடைக்கிறது.(இப்பிரபஞ்சத்திலிருந்து) அவனுக்கு மனிதன் எனும் தொழில் நுட்பமும்,தகவமைப்பும் இப்பிரபஞ்சத்திலிருந்தே அளிக்கப்பட்டது. அவன் இப்பிரபஞ்சத்தை சார்ந்தே இருக்கிறான்..(இப்பிரபஞ்ச சமுத்திரத்தில் ஒரு துளியாக)
அவன் இப்பிரபஞ்சத்துள் அடங்கி கிடக்கிறான். ஒரு மண், ஒரு கல், அல்லது ஒரு சொட்டு நீர், ஒரு செடி,ஒரு பூச்சி,( சிறிய உயிரினங்களின் எண்ணிக்கை 3,50,000 இனங்கள்).
ஒரு பறவை,ஒரு விலங்கு,( தாவர இனங்கள் மற்றும்,
விலங்கினங்களின் எண்ணிக்கை 1,20,00,000 இனங்கள்)
ஒரு மனிதன் என்பது வேதியல் வேறுபாடு தானே தவிர அணு நிலையில் அனைத்தும் சமமானதே!.எதுவும் சுயமானது இல்லை.பிரபஞ்ச மூல இயக்கம் மட்டுமே சுயமானது. மூல இயக்க முடுக்கமான சூன்யம் மட்டுமே சுயமானது. அனைத்துக்கும் அடிப்படையான அணு நிலை தளத்தில் உன்னால் கவனப்படுத்தி, உன்னை அறிய முடிந்தால் எனது உணர்வை நீ அடைவாய். இப்போது உனது ஆத்மாவும், எனது ஆத்மாவும் வேறு, வேறுயில்லை என்பதும் புரியும். பிரபஞ்சமே ஆத்மா. ஆத்மாவே பிரபஞ்சம். நீ தனியன் அல்ல! அவன் தனியன் அல்ல! அது தனியன் அல்ல! கல் தனியன் அல்ல!நீர் தனியன் அல்ல!செடி தனியன் அல்ல! விலங்கு தனியன் அல்ல! நாம் அனைத்தும் ஒன்றே!
சாதகன்: எனது ஐயப்பாடுகளை கொஞ்சம் தீர்த்து விடுங்கள் குருவே!
குரு: கூறும்.

தரிசனம் 4

குரு: ஏன் அவனுக்கு இப்படி நேர்கிறது? மனிதன் சிறு வயதில் சுயமாக சிந்திக்க துவங்கும் வரை , அவனது பெற்றோரை சார்ந்து, அவர்களது பாதுகாப்பில் இருக்கிறான். அவன் சிந்திக்க துவங்கியதும் அவன் அறிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் 'தான்' யார்? என்பதுவே!
ஆயினும் அவனுக்கு இப்போது அதற்க்கு அவகாசமில்லை. அவனை சூழ்ந்து நிற்ப்பது அவனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். 'உயிர் பயம்'. அவனது பிரதான செயலே, உயிரோடு வாழ்தல். உயிரை தொடர்ந்து காப்பாற்றிக்கொள்வது. அதற்க்கான சூழலை உருவாக்குதல். இதனை அவன் தீவிரமாக அறியும்போது ( இந்த தருணத்தில்) அதற்க்கான சூழலை உருவாக்கும் கட்டமைப்பு சார்ந்த படித்தரங்களில்(குடும்ப அமைப்பு, ஜாதீய அமைப்பு, மதம் சார்ந்த அமைப்பு, இன்ன பிற அமைப்புகள்) அவனது பெற்றோரும் அவனை இந்த 'வித்தை'யில்
பழக்கி விடுகின்றனர். இதுவே வாழ்க்கை என்று எண்ணி இதற்காகவே போராடி வாழ்ந்துஓய்ந்து முடிந்து போனவர்கள் கோடி,கோடி. இப்படியே லயித்து
வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் கோடி. அந்த கோடியில் சிலருக்கு ஏதாவது ஒரு தருணத்தில் தன்னைப்பற்றி எண்ணம் வருவது உண்டு. அவர்களுக்கு சத்தியத்தின் மீது, உண்மையின் மீது
சற்று நாட்டமிருந்தால் அவர்களுக்கு இந்த 'விவேகம்' உதிப்பதுண்டு.அப்போது அவனுக்கு அடிப்படையான கேள்விகள் எழுவதுண்டு. இதென்ன ஒருபொய்யான
வாழ்க்கை?
'நான் யார்'? நான் உயிர்ப்போடு இயங்குதற்கு ஆதாரம் யாது? 'நான்' என்று நான் கருதிக்கொண்டு இருப்பது என்ன? எனது நான் இயங்கு தளம் யாது? எனது மூலம் யாது? நான் எங்கிருந்து வருகிறேன்?என்னுடைய மூல உண்மை என்ன?
இந்த பிறவிக்கு முன் நான் இருந்தேனா? மாயை என்பது என்ன?சூன்யம் என்பது என்ன? அடிப்படைமூல உண்மை என்ன? இதுபோன்ற கேள்விகள் வருகிறது.ஆன்மீக பயணத்திற்கு அடிப்படையாய் அமைவதே நான் யார்? எனும் கேள்விதான்.

சாதகன்: இன்னும் கூட விளக்கமாக கூறுங்கள் குருவே!

தரிசனம் 3

குரு: இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதன் ஒருவன் தன்னை 'நான்' என்று அறியும் விதம், தனது காட்சிக்கு கிடைக்கும்,தனது ஐம்புல உணர்வுக்கு கிடைக்கும் இந்த உடலையே நான் என்று நினைக்கிறான். அதனால் இந்த உடலை மட்டுமே சார்ந்து வாழ பழகிக்கொள்கிறான். இந்த உடலுக்கு தேவையானதெல்லாம் எது எதுவோ அதற்காக தன்னால் முடிந்த நடைமுறைகளில் எல்லாம் செயல்படுகிறான்.இந்த உடலை காப்பாற்றிக்கொள்வதிலேயே மிக அக்கறையாக இருக்கிறான்.
அவனது மனம் இந்த உடலிலேயே குவிந்து கிடக்கிறது. அவனது உடல் இந்த பழக்கத்திற்க்கே வசமாகி, அடிமைப்பட்டு கிடக்கிறது.இது தொடர்ந்து வரும் அவனது பரம்பரை குணம். அது மரபு ரீதியாகவே அவன் 'ஜீனி'லேயே பொதிந்துள்ளது. ( இந்த குணம் மனிதனிடம் மட்டும் என்றில்லை,புழு, பூச்சியினம், பறவையினம், தாவர இனம், விலங்கினம் இவைகளிடமும் காணப்படுகிறது.)
இதனை இன்னும் சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம். இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு அணு. இந்த மனிதனின் அடிப்படை அலகும் அணுவே! இந்த பிரபஞ்சத்தின் ஆத்மா அணு இயக்க அளவிலேயே தளம் கண்டிருக்கிறது. மனிதனின் அலகு அணுவானாலும், அவனது ஆத்மா அணு இயக்க அளவிலேயே தளம் கண்டிருந்தாலும், அவனது மனமோ அணுக்களின் கூட்டு தொகுதியான திசு, திசுக்களின் கூட்டு தொகுதியான உடல் உறுப்பு, உடல் உறுப்புகளின் தொகுதியான இந்த உடல் மீதே நான் என்கிற கவனத்தை கொண்டிருக்கிறது.
சாதகன்: பின்னும் சொல்லுங்கள் குருவே!

தரிசனம் 2

சாதகன்: உனது ஆர்வமும், தீவிரமும் உனது தேவைக்கு ஏற்ப்பவே உறுதி செய்யப்படுகிறது.என்று கூறினீர்கள் எனது தேவை என்பது என்ன?
குரு: உனது அறிவு வேட்கைக்காக என்னை அறிய விரும்புகிறாயா? அல்லது என்னோடு கலப்பது தவிர உனக்கு வேறு வழியில்லையா?
சாதகன்: எனது அறிவு வேட்கைக்காகவே உங்களோடு இணைய விரும்புகிறேன்.
குரு: அதற்க்கு சாத்தியமே இல்லை.நீ என்னோடு இணைவது தவிர வேறு கதி இல்லை என்பதை நீ உன் வாழ்க்கையில் உணர்ந்திருந்தால் ஒழிய, நீ என்னோடு கலப்பதற்கு வேறு மார்க்கம் கிடையாது. முதலில் உன்னை நீ யார்? என்பதை அறிய வேண்டும். அறிந்த பின்னே மற்றதுக்கு சாத்தியம்.
சாதகன்: நான் யார்? என்பதை எனக்கு புரியும்படி விளக்குங்கள்.

Monday, April 19, 2010

தரிசனம் 1

குரு: என்னை அறிவதில் உனக்கு ஆர்வம் உண்டா?
சாதகன்: ஆம் குருவே உங்களை பூரணமாக அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.
குரு: உனது தேடல் என்னை அறிந்து கொள்வதா?
சாதகன்: அறிந்து கொள்வது மட்டுமல்ல,உங்களோடு இணைந்து கொள்ளவும் விழைகிறேன்.
குரு: என்னை சற்றேனும் அறிந்திருக்கிறாயா?
சாதகன்: கண நேரம் சில முறை அறிந்தது போல உணர்ந்திருக்கிறேன்.
குரு: ஆக உனக்கு என்னோடு பரிச்சயமுண்டு?
சாதகன்: ஆம் குரு!
குரு: என்னோடு நீ இணைந்து கொள்ளும் போது, உனக்கு நேரப்போவது பற்றி உனக்கு ஏதேனும் யோசனை உண்டா?
சாதகன்: சரியாக புரியவில்லை குருவே!
குரு: என்னோடு நீ இணைந்து கொள்ளும்போது 'நீ' இருப்பாயா?
சாதகன்: இருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். விபரமாக கூறுங்கள் குருவே!
குரு: 'நீ' இருந்தால் என்னோடு இணைந்தது ஆகுமா?
சாதகன்: கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் குருவே!
குரு: நீ உனது குருவோடு இணைந்து கொள்ளும்போது நீயும் குருவின் தன்மையனாக ஆகிவிடுகிறாய்.
அப்போது உனது 'நான்' 'நீ' என்கிற உனது உடல் சார் எண்ணம் போய்விடும். அங்கு உனது 'நீயும்' இல்லை, 'நானும்' இல்லை. அங்கு உள்ளது பேதமற்ற ஒன்று மட்டுமே.
சாதகன்: உங்களோடு நான் இணைவதற்கு உபாயம் சொல்லுங்கள் குருவே!
குரு: அது மிக சுலபம், ஆயினும் மிகவும் கடினமானதும்கூட! இயல்பாகவே நான் உன்னுடன் இணைந்துகொள்வதில்
ஆர்வமும், தீவிரமும் உள்ளபடி இருக்கிறேன். நீயும் என்னோடு இணைவதில் ஆர்வமும், தீவிரமும் காட்டினால் இணைவது சுலபம். உனது ஆர்வமும், தீவிரமும் உனது தேவைக்கு ஏற்ப்பவே உறுதி செய்யப்படுகிறது. நீ உனது 'நான்' எனும் கருத்துருவையும், அதனை சார்ந்த அனைத்தையும் விட்டு விலகினால் ஒழிய என்னோடு இணைவது கடினம்.

Friday, April 16, 2010

ஒன்று :அறிமுகம்


எனது கடந்தகால வாழ்வில், எனக்கு சரியான குரு வாய்க்காததால் லேசாக மனம் அலைவுற்றேன். ஒரு மனிதரானவர் ஞானநிலை எய்திய பின், என்னதான் அறிந்திருந்தாலும் ஒரு இடையாறாத, த்யான மோன நிலையை அனுஷ்டிப்பதிலிருந்து தவறி, ஒரு சாதாரண மனித மனநிலையில் அவ்வப்போது விழுந்து விடுகின்றனர். இங்ஙனமே நிறைய பேருக்கு நேர்ந்திருக்கிறது. இதுவே ஆன்மீக உண்மை வரலாறு. அவர் சற்று வயதானவர் என்றால், இந்த தொடர் தியானத்திற்கு அவரது உடல் ஆரோக்யநிலை ஒத்து கொடுப்பதில்லை.அந்த பூரண சக்தியை தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவரே ஒரு இளைஞராக இருந்தால் அவரது மன சேஷ்டைகள் ஒத்துக்கொடுப்பதில்லை. ஞானமடைந்த ஒருவர் மீண்டும் உயிர்வாழ்தல் என்பது ஒரு தந்திரம் மிகுந்த நிகழ்வுதான். இது எப்படியாயினும், ஞானமடைந்த ஒருவரால் ஒரு குருவாக இருந்து ஞானத்தை அடைவது எப்படி என மிக எளிமையாகவும், சற்று தீவிரமாகவும் சொல்லி கொடுக்க முடிவது இல்லை. இந்த சாதகர்களும் அவரை நடமாடும் கடவுள் என்றும், அவரை இந்த மனித குலத்தை உய்விக்க வந்த அவதார புருஷர் என்றும் புகழின் உச்சிக்கு ஏற்றிவிடுவதால், அவரும் அந்த உயரம் தாங்காது, உயரத்திலிருந்து தடுமாறி விழுந்து சாதாரண மனித மன நிலைக்கே வந்து விடுகிறார். ஒரு குரு மிக எளிமையானவரும், சாமான்யனும் நெருங்கி பழகும் அளவுக்கு பக்குவமானவராகவும் இருத்தல் வேண்டும்.ஒரு சாதகனை விகல்ப மன நிலையிலிருந்து, நிர்விகல்ப மன நிலைக்கு எடுத்து செல்வது மட்டுமே ஒரு குருவானவரின் வேலை. இதை தவிர வேறு பணிகளையும் செய்பவர் ஒரு தூய்மையான குரு ஆகமாட்டார். ஒரு குருவானவரிடம் எனது எதிர்பார்ப்பு இதுவே.ஒரு இரண்டு மாத தவிப்பிற்கு பிறகு ஒரு குரு வாய்த்தார். அது எனது துளிநேர நிர்விகல்ப மன நிலையில் அறியப்பட்டது. அவர் ஏற்க்கனவே நமக்கு பரிச்சயப்பட்டவர்தான். அவரேஆதிப்பரம் பொருளான பிரபஞ்சபேரறிவு. அவரே நமக்கு குருவாக வாய்த்தார். இனி அவரது வாக்கியங்களை பார்ப்போம்.