Tuesday, April 20, 2010

தரிசனம் 3

குரு: இந்த பிரபஞ்சத்தில் வாழும் மனிதன் ஒருவன் தன்னை 'நான்' என்று அறியும் விதம், தனது காட்சிக்கு கிடைக்கும்,தனது ஐம்புல உணர்வுக்கு கிடைக்கும் இந்த உடலையே நான் என்று நினைக்கிறான். அதனால் இந்த உடலை மட்டுமே சார்ந்து வாழ பழகிக்கொள்கிறான். இந்த உடலுக்கு தேவையானதெல்லாம் எது எதுவோ அதற்காக தன்னால் முடிந்த நடைமுறைகளில் எல்லாம் செயல்படுகிறான்.இந்த உடலை காப்பாற்றிக்கொள்வதிலேயே மிக அக்கறையாக இருக்கிறான்.
அவனது மனம் இந்த உடலிலேயே குவிந்து கிடக்கிறது. அவனது உடல் இந்த பழக்கத்திற்க்கே வசமாகி, அடிமைப்பட்டு கிடக்கிறது.இது தொடர்ந்து வரும் அவனது பரம்பரை குணம். அது மரபு ரீதியாகவே அவன் 'ஜீனி'லேயே பொதிந்துள்ளது. ( இந்த குணம் மனிதனிடம் மட்டும் என்றில்லை,புழு, பூச்சியினம், பறவையினம், தாவர இனம், விலங்கினம் இவைகளிடமும் காணப்படுகிறது.)
இதனை இன்னும் சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போம். இந்த பிரபஞ்சத்தின் அடிப்படை அலகு அணு. இந்த மனிதனின் அடிப்படை அலகும் அணுவே! இந்த பிரபஞ்சத்தின் ஆத்மா அணு இயக்க அளவிலேயே தளம் கண்டிருக்கிறது. மனிதனின் அலகு அணுவானாலும், அவனது ஆத்மா அணு இயக்க அளவிலேயே தளம் கண்டிருந்தாலும், அவனது மனமோ அணுக்களின் கூட்டு தொகுதியான திசு, திசுக்களின் கூட்டு தொகுதியான உடல் உறுப்பு, உடல் உறுப்புகளின் தொகுதியான இந்த உடல் மீதே நான் என்கிற கவனத்தை கொண்டிருக்கிறது.
சாதகன்: பின்னும் சொல்லுங்கள் குருவே!

1 comment:

  1. தேகம் மண்கலம் போன்ற ஜடப்பொருள். இதற்கு ‘நான்’ என்று தானே விளங்கும் விளக்கம் இல்லை.
    சப்த தாதுக்களால் ஆகிய ஜடதேகமும், ஐம்புலன்களும், அவைகளின் தொழிலும், நினைக்கின்ற மனமும் ‘நான்’ என்ற உண்மை பொருள் அல்ல என்ற திட்பம் உணரப்பட வேண்டும். ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் மூச்சும், மூர்ச்சை-பயம்-துக்கம் ஆகிய காலங்களில் நின்றுபோய் மீண்டும் மனத்துடன் வெளிப்படுவதால் பிராணனும் ‘நான்’ அல்ல என்றுணர வேண்டும். அப்போது அவன் நினைவுகளும் தேகேந்திரிய சலனங்களும் ஓய்ந்து, ஆனால் மீண்டும் எழக் கூடிய விஷய வாசனைகளுடன் மட்டும் கூடி, தூக்கத்தில் அமிழ்ந்திருக்கும் சுழுப்தி நிலையை அடைவான். இச்சுழுப்தியிலும் கர்மத் திரள் (விஷய வாசனை) அற்றுப் போகாமல் மீண்டும் எழக் காரணமாவதால் இந்த அஞ்ஞான சுழுப்தி இருளும் ‘நான்’ அல்ல என்ற அனுபவம் உண்டாக வேண்டும்.

    ReplyDelete