Monday, April 19, 2010

தரிசனம் 1

குரு: என்னை அறிவதில் உனக்கு ஆர்வம் உண்டா?
சாதகன்: ஆம் குருவே உங்களை பூரணமாக அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறேன்.
குரு: உனது தேடல் என்னை அறிந்து கொள்வதா?
சாதகன்: அறிந்து கொள்வது மட்டுமல்ல,உங்களோடு இணைந்து கொள்ளவும் விழைகிறேன்.
குரு: என்னை சற்றேனும் அறிந்திருக்கிறாயா?
சாதகன்: கண நேரம் சில முறை அறிந்தது போல உணர்ந்திருக்கிறேன்.
குரு: ஆக உனக்கு என்னோடு பரிச்சயமுண்டு?
சாதகன்: ஆம் குரு!
குரு: என்னோடு நீ இணைந்து கொள்ளும் போது, உனக்கு நேரப்போவது பற்றி உனக்கு ஏதேனும் யோசனை உண்டா?
சாதகன்: சரியாக புரியவில்லை குருவே!
குரு: என்னோடு நீ இணைந்து கொள்ளும்போது 'நீ' இருப்பாயா?
சாதகன்: இருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். விபரமாக கூறுங்கள் குருவே!
குரு: 'நீ' இருந்தால் என்னோடு இணைந்தது ஆகுமா?
சாதகன்: கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள் குருவே!
குரு: நீ உனது குருவோடு இணைந்து கொள்ளும்போது நீயும் குருவின் தன்மையனாக ஆகிவிடுகிறாய்.
அப்போது உனது 'நான்' 'நீ' என்கிற உனது உடல் சார் எண்ணம் போய்விடும். அங்கு உனது 'நீயும்' இல்லை, 'நானும்' இல்லை. அங்கு உள்ளது பேதமற்ற ஒன்று மட்டுமே.
சாதகன்: உங்களோடு நான் இணைவதற்கு உபாயம் சொல்லுங்கள் குருவே!
குரு: அது மிக சுலபம், ஆயினும் மிகவும் கடினமானதும்கூட! இயல்பாகவே நான் உன்னுடன் இணைந்துகொள்வதில்
ஆர்வமும், தீவிரமும் உள்ளபடி இருக்கிறேன். நீயும் என்னோடு இணைவதில் ஆர்வமும், தீவிரமும் காட்டினால் இணைவது சுலபம். உனது ஆர்வமும், தீவிரமும் உனது தேவைக்கு ஏற்ப்பவே உறுதி செய்யப்படுகிறது. நீ உனது 'நான்' எனும் கருத்துருவையும், அதனை சார்ந்த அனைத்தையும் விட்டு விலகினால் ஒழிய என்னோடு இணைவது கடினம்.

1 comment: